இது ஒரு மலைக்கோயில். திருமங்கையாழ்வார் இந்த ஸ்தலத்திற்கு எழுந்தருளியபோது இந்த மலையைச் சுற்றி ஊர் நீர் அரண்போல் சூழ்ந்திருந்ததால் 'திருநீர்மலை' என்ற பெயர் பெற்றதாக ஸ்தல புராணம் கூறுகிறது.
இந்த கோயிலில் மலை அடிவாரத்தில் நீர்வண்ணன் சன்னதியும், மலை மீது சாந்த நரஸிம்மர், ரங்கநாதர், திரிவிக்கிரமன் என்று 4 மூலவர்கள் உள்ளனர். பகவான் நின்றான், கிடந்தான், இருந்தான், நடந்தான் என்ற நான்கு திருக்கோலங்களில் ஸேவை சாதிக்கும் ஸ்தலம் இது.
மலை அடிவாரக் கோயில் மூலவர் நீர்வண்ணன், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயாருக்கு அணிமாமலர் மங்கை என்பது திருநாமம்.
மலை மேல் உள்ள கோயிலில் மூலவர் சாந்த நரஸிம்மர், வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார்.
மலைக்கோயிலில் இரண்டாவது மூலவர் ரங்கநாதர், மாணிக்க சயனம், தெற்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயாருக்கு ரங்கநாயகி என்பது திருநாமம்.
மலைக்கோயிலில் மூன்றாவது மூலவர் திரிவிக்கிரமன், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார்.
வால்மீகி முனிவர் இந்த ஸ்தலத்திற்கு வந்து மலைமீதுள்ள மூர்த்திகளை வழிபட்டு, கீழே வந்து மலை அடிவாரத்தில் உள்ள தீர்த்தத்தில் நின்று ஸ்ரீராமபிரானை தியானம் செய்ய, அவர் சீதா தேவி, லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன், சுக்ரீவன், கருடன், அனுமனாகக் காட்சி தந்தார். முனிவர் பிரார்த்தித்துக் கொண்டபடி நீர்வண்ணனாக இங்கு ஸேவை சாதிப்பதாக ஐதீகம். அதன்படி அடிவாரக் கோயிலில் உள்ளே நுழைந்தவுடன் இராமபிரான் சன்னதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொண்டைமான், பிருகு முனிவர், மார்க்கண்டேயர் ஆகியோருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
திருமங்கையாழ்வார் 19 பாசுரங்களும், பூதத்தாழ்வார் ஒரு பாசுரமுமாக மொத்தம் 20 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|